செங்கல்பட்டில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளை செல்போனில் பேசியபடி ஓட்டும் டிரைவர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வரும் அரசு பேருந்துகளில் செல்போனில் பேசியபடியே டிரைவர்கள் ஓட்டி வருகின்றனர். இதனால் அவர்களின் கவனம் சிதறக்கூடிய வாய்ப்பினால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை மாமல்லபுரம் நோக்கி ஒரு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து செங்கல்பட்டில் இருந்து கிளம்பியபோது, அதன் டிரைவர் காதில் வைத்த செல்போனை எடுக்கவே இல்லை. அப்பேருந்து திருக்கழுக்குன்றம் செல்லும்வரை செல்போனில் பேசியபடியே டிரைவர் இயக்கியுள்ளார்.

மேலும், அவர் சட்டை பையில் செல்போனை வைக்கும்போது, ஸ்டியரிங்கில் இருந்து 2 கைகளையும் எடுத்து செல்போனை பத்திரமாக பிடித்து வைக்கிறார். இதை பார்த்து பயணிகள் பயந்தபடியே சென்றனர். அதை பற்றி டிரைவர் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மாநகர பேருந்து ஓட்டுனரும் செல்போனை காதில் வைத்தபடி, ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்து ஓட்டியபடி, பயணிகள் அச்சப்படும் வகையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் செங்கல்பட்டில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் டிரைவர்கள் செல்போனில் பேசியபடியும், இரு கைகளையும் ஸ்டியரிங்கில் இருந்து எடுத்து சாகச செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அரசு பேருந்துகளில் செல்போனில் பேசியபடியே டிரைவர் ஓட்டி செல்வதை பலர் வீடியோவாக படம்பிடித்து, பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

போக்குவரத்து சட்டப்படி, அரசு பேருந்து டிரைவர்கள் வாகனத்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது. முக்கிய போன்கால் என்றால் கண்டக்டர்கள்தான் எடுத்து பேசவேண்டும். இல்லையேல், கடைசி பேருந்து நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசவேண்டும் என்று விதி உள்ளது. எனினும், இந்த விதியை மாநகர, அரசு பேருந்து டிரைவர்கள் முறையாக கடைப்பிடிப்பதில்லை. இதுகுறித்து பயணிகள் பலமுறை கண்டனம் தெரிவித்தும், அவர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற டிரைவரின் அலட்சிய செயல்பாடுகளால் அதிகளவு விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post செங்கல்பட்டில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளை செல்போனில் பேசியபடி ஓட்டும் டிரைவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: