வருடம் ஒருமுறையாவது காவல்துறையினர் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

*மருத்துவ பரிசோதனை முகாமில் மாநகர கமிஷனர் ஆலோசனை

திருச்சி : திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் வருடம் ஒருமுறையாவது கல்லீரல், இதயம் போன்ற முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று காவலர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கி வைத்து மாநகர கமிஷனர் சத்தியபிரியா கேட்டுக்கொண்டார்.
திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல்அதிகாரிகள் மற்றும் காவலர்களின் உடல்நலனைபாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர காவலர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் மே 20ம் தேதி காது சம்மந்தப்பட்ட சிறப்பு முகாம், ஜூன் 17ம் தேதி இதயம் காப்போம் என்ற தலைப்பில் இதயம் சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு நடைபெற்றது.

இந்நிலையில் திருச்சி கே.கே. நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் காவலர்கள் மற்றும் அவர்களின்குடும்பத்தினர்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பாக மூத்த தலைமை செயல் அதிகாரி நீலகண்ணன் மற்றும் மூத்த பொது மேலாளர் தலைமை அதிகாரி சாமுவேல், மாநகர காவல் ஆணையர்கள் (தெற்கு மற்றும் வடக்கு), கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை) காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாம் வருகிற 16ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் மாநகர கமிஷனர் சத்தியப்பிரியா பேசுகையில், அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ் வாகனத்தில் இதயம், நுரையீரல், எலும்பு, கல்லீரல், கணையம், ரத்த அழுத்தம், சிறுநீரகம், இசிஜி, எக்கோ, எக்ஸ் ரே என 28 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யும் வகையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் கலந்து கொண்டுள்ளனர். காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காவல்துறையில் மனஅழுத்த அளவு அதிகமாக உள்ளது. எனவே அதனை அவ்வப்போது பரிசோதனை செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு நேரமின்மை காரணமாக பரிசோதனை செய்ய முடியாமல் போகிறது. எனவே காவலர்கள் இருக்கும் இடத்திற்கே உபகரணங்களை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ளஇந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையை சேர்ந்தவர்கள் வருடம் ஒருமுறையாவது தங்களது இதயம், கல்லீரல் போன்ற முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இம்முகாமை நடத்தும் அப்பல்லோ மருத்துவமனைக்கு திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

மருத்துவ முகாமையொட்டி ‘அப்போலோ ஹெல்த் செக் ஆன்வீல்ஸ்’ என்ற வாகனத்தை மாநகர கமிஷனர் சத்தியப்பிரியா தொடங்கி வைத்தார்.மருத்துவ முகாமில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 216 நபர்களும், காவலர் குடும்ப உறுப்பினர்கள் 105 நபர்களும், அமைச்சுப்பணியாளர் ஒருவர் என மொத்தம் 322 நபர்கள் பயனடைந்தனர். திருச்சி மாநகர காவல்துறையினரின் உடல் நலன் பேணும் வகையில் இதுபோன்று பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post வருடம் ஒருமுறையாவது காவல்துறையினர் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: