ஜூன், ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: ‘‘ஜூன், ஜூலை மாதத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும்’’ என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு 34 டிஎம்சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும். கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.

அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசனத்துக்கு திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வற்புறுத்தி பெறுவதற்கான நடவடிக்கைகளை உறுதியோடு அரசு செய்ய வேண்டும் என விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்த கொண்டனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து வலியுறுத்த உள்ளார். அப்போது காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை உறுதி செய்ய மீண்டும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், ஒன்றிய நீர்வளத்துறைக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘‘ஜூலை மாதத்திற்குள் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு காவிரியில் திறந்து விட வேண்டும். அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி தண்ணீர் மற்றும் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும். ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க அறிவுறுத்த வேண்டும். மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் பத்து நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஜூன், ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: