மலை கிராமங்களின் வீரர்களுக்கு விளையாட்டுத்துறையில் வாய்ப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

திருவண்ணாமலை: ‘மலைவாழ் மக்களிடம் விளையாட்டுத்திறமையுள்ள வீரர்கள் அதிகம். எனவே, அவர்களை அடையாளம் கண்டு, உரிய வாய்ப்புகளை விளையாட்டுத்துறை பெற்றுத்தரும்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் நேற்று கலைஞர் நூற்றாண்டு கோடை விழா -2023 விமரிசையாக நடந்தது. இந்த விழாவை தொடங்கி வைத்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு பழங்குடியின மக்கள் சாதிச்சான்று வழங்க தெளிவான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 5875 குடியிருப்பு பகுதிகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவை அறிந்து கான்கிரீட் வீடுகள், குடிநீர், மின்சார இணைப்பு, குடும்ப அட்டைகள், மருத்துவக் காப்பீடு அட்டைகள், நல வாரிய அட்டைகள், உதவித்தொகை, சாலை வசதி திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

வட மாநிலங்களில் எல்லா மலை கிராமங்களுக்கும் விரைவில் மின்வசதி வழங்குவோம் என்கிறது ஒன்றிய அரசு. ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே, அனைத்து மலை கிராமங்கள் மட்டுமல்ல, அங்குள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மின் இணைப்பை வழங்கியவர் கலைஞர். மலை கிராமங்களில் அதிகமான உண்டு உறைவிடப் பள்ளிகளை திறந்தவர் கலைஞர். அதனால்தான், இன்று மலைவாழ் பகுதிகளில் இருந்து டாக்டர்கள், இன்ஜினியர்கள் உருவாகியுள்ளனர். இந்தியாவிலேயே பழங்குடியின மக்கள் நிம்மதியாகவும், அடையாளத்தை தொலைக்காமலும் வாழும் மாநிலம் தமிழ்நாடு தான். அதற்கு காரணம், திமுகவும், முதல்வரும்தான்.

பழங்குடியின மக்கள், அவர்களின் பூர்வீக நிலத்திலேயே எல்லா உரிமைகளோடும், சலுகைகளோடும் வாழ வேண்டும் என செயல்படுகிறது திமுக அரசு. மலைவாழ் மக்களிடம் விளையாட்டுத்திறமையுள்ள வீரர்கள் அதிகம். எனவே, அவர்களை அடையாளம் கண்டு, உரிய வாய்ப்புகளை விளையாட்டுத்துறை பெற்றுத்தரும். கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில், ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார் முதல்வர். மகளிர் குழுக்களுக்கு ரூ.1,250 கோடி இந்த ஆண்டு மட்டும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜவ்வாதுமலை சுற்றுலா தலமாக மாற்றப்படும் என கடந்த பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்தார். மேலும், முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.8.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள் நடந்து வருகிறது. சாலை வசதி வேண்டும் என்பதுதான் மலைவாழ் மக்களின் முக்கிய கோரிக்கை. அதனை, படிப்படியாக இந்த அரசு செயல்படுத்தும். பரமனந்தல் முதல் அமிர்தி வரை சுமார் 67 கி.மீ புதிய சாலை அமைக்க ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விைரவில், வனத்துறை அனுமதி பெற்று இத்திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மலை கிராமங்களின் வீரர்களுக்கு விளையாட்டுத்துறையில் வாய்ப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: