டாக்டரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான ஈ.டி அதிகாரி அங்கித் திவாரி மேலும் ஒருவரிடம் லஞ்சம்: ஆதாரம் சிக்கியது, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

திண்டுக்கல்: டாக்டரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மேலும் ஒருவரிடம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் சிக்கி உள்ளது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர் சுரேஷ் பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிந்த வழக்கை காட்டி மிரட்டி, அவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் பலரின் வழக்குகளை கையில் எடுத்து லஞ்ச பெற்றதாகவும், அந்த பணத்தில் உயரதிகாரிகளுக்கும் பங்கு கொடுத்ததாகவும் அங்கித் திவாரி தெரிவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம், அங்கித் திவாரி வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்கள், மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அங்கித் திவாரியை 3 நாள் போலீஸ் காவலில் கடந்த 12ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்தனர்.

திண்டுக்கல் இபி காலனியில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து போலீசார் அங்கித் திவாரியிடம் 3 நாட்களாக இரவு, பகலாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மடிக்கணினிகளில் இருந்த தகவல்களை கொண்டு யார், யாரிடம் லஞ்சம் வாங்கினாரா? எந்த அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்தார்? என துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது, அங்கித் திவாரி இதுபோல் மேலும் ஒருவரிடம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

3 நாள் காவல் முடிந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி மோகனா, அங்கித் திவாரியிடம், ‘‘உங்களுக்கு உணவு, மருத்துவம், குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுத்தார்களா, உங்களை துன்புறுத்தினரா’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கித் திவாரி, தனக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாகவும், துன்புறுத்தப்படவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தீர்களா என கேட்டார்.

அதற்கு அவர், தனக்கு தெரிந்தவரை பதில் அளித்து ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தார். ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார், தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அங்கித் திவாரி சரியாக பதில் அளிக்காமல் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என நீதிபதியிடம் கூறினர். இதை தொடர்ந்து நீதிபதி மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என கூறினார். இதையடுத்து அங்கித் திவாரி மீண்டும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

The post டாக்டரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான ஈ.டி அதிகாரி அங்கித் திவாரி மேலும் ஒருவரிடம் லஞ்சம்: ஆதாரம் சிக்கியது, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: