கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் எண்ணெய் படலம் உள்ள இடத்தில் கடலோர காவல்படை கண்காணிப்பு

சென்னை: எண்ணூரில் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் கொண்டு கடலோர காவல்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து கடலோர காவல்படையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் சூறாவளிக்குப் பிறகு, எண்ணூர் கழிமுகப்பகுதி மற்றும் பக்கிங்காம் கால்வாய் வரை வெள்ள நீரில் எண்ணெய் கசிவு காணப்பட்டது. அதனை அடுத்து கடந்த 10ம் தேதி கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வின் மூலம் கொசஸ்தலையாற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் உள்ள கடலோர நீரில் எண்ணெய் தடயங்கள் கண்டறியப்பட்டது.

எண்ணெய் கசிவின் அளவு 20 சதுர கி.மீ பரப்பளவில் பரவியது, இது வெளிர் பளபளப்பு முதல் அடர் பழுப்பு நிறம் வரை இருந்தது. கசிவு அளவு தோராயமாக 10 டன்கள் என கடலோரக் காவல்படையால் மதிப்பிடப்பட்டது. உடனடியாக, எண்ணெய் படலத்தை கரைப்பதற்கு வான்வழியாக ஹெலிகாப்டர் மூலமாக கரைப்பான்களும் தூவப்பட்டது. அதற்கு பிறகான ஆய்வில் கொசஸ்தலையாற்றின் வழியாக கடலில் கலக்கும் வெள்ளம் குறைந்ததால், கழிமுகப் பகுதிக்குள்ளேயே எண்ணெய் சிக்கியுள்ளது. கழிமுகத்தில் தங்கியுள்ள எண்ணெய்யை அகற்றும் பணி அவசியமானது என கண்டறியப்பட்டது.

இதை சுத்தம் செய்யும் பணியினை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கலந்துள்ள எண்ணெய் பற்றியான மதிப்பீடு செய்தல், சுத்தம் செய்தல் மற்றும் மீட்டெடுப்பதற்கு கடலோர காவல்படை, சிபிசிஎல் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றன. மேலும், கடலோரப் பகுதியில் எண்ணெய் படலம் தற்போது ஏதும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் எண்ணெய் படலம் உள்ள இடத்தில் கடலோர காவல்படை கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: