குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தீப்பிடித்து எரிந்தது சொகுசு கார்: டிரைவர் தப்பினார்

தாம்பரம்: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. திருவல்லிக்கேணி, வெங்கட்ராம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் அருண்பாலாஜி (37), தொழிலதிபர். இவருக்கு, கார் ஓட்டுநராக குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (22) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அருண்பாலாஜியின் பிஎம்டபிள்யூ காரில் திண்டிவனத்தில் இருக்கும் அவரது நண்பரை அழைத்து வருவதற்காக ஓட்டுநர் பார்த்தசாரதி, நேற்று காலை திருவல்லிக்கேணியில் இருந்து திண்டிவனம் நோக்கி புறப்பட்டார்.

ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே கார் சென்றபோது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால், ஓட்டுநர் பார்த்தசாரதி உடனடியாக காரை நிறுத்திவிட்டு, வெளியே வந்துள்ளார். சிறிது நேரத்தில் காரில் புகை மூட்டம் அதிகமாகி கார் தீப்பிடித்து, மளமளவென பரவி கார் முழுவதுமாக எரிய தொடங்கியது.

இதனால், அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு படை அலுவலகம் மற்றும் குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தீப்பிடித்து எரிந்தது சொகுசு கார்: டிரைவர் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: