கொரோனா பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது போலீசார் பிடியில் இருந்து வங்கதேச கைதி தப்பி ஓட்டம்: ஓமந்தூரார் மருத்துவமனையில் பரபரப்பு

சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கதேச வாலிபரை கொரோனா பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளிடம் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வங்கதேச நாட்டை சேர்ந்த பிலால் உசேன் (32) என்பவரின் பாஸ்போர்ட் மற்றும் உடமைகளை ஆய்வு செய்தனர். அதில், அவர் இந்திய குடியுரிமையுடன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததை பார்த்து அவரை பிடித்து தனியாக விசாரணை நடத்தினர்.

அதில், அவர் இந்தியாவில் போலியான ஆதார் எண்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று அதன் மூலம் வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் பிலால் உசேனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலி பாஸ்போர்ட் தயாரித்த மோசடியில் வங்கதேசத்தை சேர்ந்த பிலால் உசேனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.பின்னர் பிலால் உசேனை சட்ட விதிகளின்படி உடல் பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் போலீசாரிடம் சிறுநீர் கழித்துவருவதாக கூறிவிட்டு மருத்துவமனையில் உள்ள கழிப்பிடத்திற்கு சென்றார். உடனே திரும்பி வரவேண்டும் என்று கூறி போலீசார் அவரை அனுப்பினர்.

சிறுநீர் கழிக்க சென்ற கைதி பிலால் உசேன் வெகு நேரம் வெளியே வராததால் உடன் வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்த போது, அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே தப்பி ஓடிய கைதியை மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு வேறு வழியின்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடந்த சம்பவத்தை கூறி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி திருவல்லிக்கேணி போலீசார் மருத்துவமனை மற்றும் வாலாஜா சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பி ஓடிய வங்கதேச குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கொரோனா பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது போலீசார் பிடியில் இருந்து வங்கதேச கைதி தப்பி ஓட்டம்: ஓமந்தூரார் மருத்துவமனையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: