திருவான்மியூர் பாம்பன் சாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவான்மியூர் பாம்பன் சாமி கோயிலுக்கு அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை, என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாயூரபுரம் குரு பாம்பன் மத் குமரகுரு தாஸ் அன்னாதானம் சபையின் தலைவர் டி.சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பாம்பன் சுவாமிக்கு 1929ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை குப்புசாமி செட்டியார் தலைமையிலான சபை பூஜைகளை செய்து வந்தது. பின்னர் இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதை எதிர்த்து, நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், இந்த கோயிலில் பூஜை செய்ய மேலும் பல சபைகள் உருவாகின. இந்த நிலையில் பாம்பன் சுவாமிகளின் சமாதியை வளைத்து கோயில் போல் உருவாக்கி, வருகிற 12ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாம்பன் சாமி கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள பல்வேறு தீர்ப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மீறியுள்ளனர். எனவே, வரும் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவில், பாம்பன் சாமி கோயிலுக்கு திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடத்தலாம். கும்பாபிஷேகத்தில் மனுதாரரோ இதேபோல் வழக்கு தொடர்ந்தவர்களோ எந்த இடையூறும் தரக்கூடாது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் கருதப்பட வேண்டும். முதல்மரியாதை போன்றவற்றை அனுமதிக்க கூடாது. வழக்கு தொடர்ந்த மனுதாரரும் ஒரு பக்தர்தான். இதை அறநிலையத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை வராதவாறு போலீஸ் பாதுக்காப்பை அறநிலையத்துறை பெற்றுக்கொள்ளலாம்.

மனுதாரர், தன் கோரிக்கை குறித்து அறநிலையத்துறையிடம் மனு கொடுக்க வேண்டும். அதன்மீது வருகிற 24ந்தேதி நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துகூறலாம். மனுதாரர் தரப்புக்கு உரிய வாய்ப்பு தந்து விசாரித்து 6 மாதங்களுக்குள் அறநிலையத்துறை முடிவு அறிவிக்க வேண்டும். இந்த கும்பாபிஷேகத்தின் போது சட்டஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படக்கூடாது. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

The post திருவான்மியூர் பாம்பன் சாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: