தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு

சென்னை: தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கூட்டுறவு சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23,149 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்தது.

அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டாக இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டாக குறைத்து சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டு பதவியில் நீடித்தனர்.

இந்தநிலையில் பெரும்பாலானவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. இதற்காக கூட்டுறவு சங்கங்களின் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி பலரும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தனர். ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் இருந்து தற்போது நீக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் சுமார் 63 லட்சம் பேர்களின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரி கூறுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டு தற்போது வரை மொத்தம் 1 கோடியே 90 லட்சத்து 26 ஆயிரத்து 152 பேர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 63 லட்சத்து 22 ஆயிரத்து 288 பேர் தகுதியற்றவர்கள் மற்றும் முறைகேடாக சேர்க்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டதால் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த ஆதார் கார்டு, ரேஷன் அட்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கூறி உள்ளோம். அதன் அடிப்படையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்” என்றார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Related Stories: