கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

சென்னை: அமாவாசையொட்டி விலை உயரும் என்று எதிர்பார்த்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக சரிந்தது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மல்லி, முல்லை, கேந்தி உள்ளிட்ட பூ வகைகளை விற்பனைக்கு வருகின்றன.

அதேபோல், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பூக்கள் லாரிகள் மூலமாக விற்பனைக்கு வருகிறது. மொத்த விலையிலும், சில்லரையாகவும் பூக்கள் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கூட்டம் பூ மார்க்கெட்டில் அலைமோதும். அதிகாலை முதலே பூ வியாபாரம் களைகட்டும்.

இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று அனைத்து பூக்களின் விலையும் சரிந்தது. ஒரு கிலோ அளவில் மல்லி ₹300, ஜாதி மல்லி மற்றும் முல்லை ₹200, கனகாம்பரம் ₹400, சாமந்தி ₹240, சம்பங்கி ₹120, அரளி பூ ₹180, பன்னீர் ரோஸ் ₹50, சாக்லேட் ரோஸ் ₹70, என விலை குறைந்து விற்பனையானது. இன்று அமாவாசை என்பதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளும், கொள்முதல் செய்த மொத்த விலை வியாபாரிகளும் விலை சரிந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘இன்று அமாவாசையையொட்டி பூக்கள் விலை உயரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையின் காரணமாக பூக்கள் விலை சரிந்தது. பூக்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகளும், நல்ல விலைக்கு விற்க முடியாமல் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்’’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: