தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வயிற்று வலியால் அவதிப்பட்ட எனது 12 வயது மகன் கிஷோரை மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் அபினவ் என்பவர் அறுவை சிகிச்சை முன் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தன் மகன் கிஷோரை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்க மறுத்த நிலையில். கிஷோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டரின் பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, எனது மகன் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கதிரவன் ஆஜராகி, அரசியல் செல்வாக்கு இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணியாற்றுவதால் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட மயக்க மருந்து அதிகமானதன் காரணமாகவே கிஷோர் உயிரிழந்துள்ளார் என்று வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதி, அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மயக்கவியல் மருத்துவர் அபினவ் ஏன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க சென்றார். அவர் மீது பணி நீக்க நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியத்துடன், இந்த மனுவுக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், மருத்துவ கல்வி இயக்க இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: