வழக்கறிஞர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் புதிய ஷரத்துகளை சேர்த்துள்ளதால் குற்றவியல் சட்டங்களில் குழப்பங்கள்: பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து

சென்னை: ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றம் ெசய்து பல்வேறு புதிய ஷரத்துகளை சேர்த்து ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த 3 குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றத்திற்கும், சட்டங்களில் மாற்றம் செய்திருப்பதற்கும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வழக்கறிஞர்கள் தொடர்ந்து இந்த சட்டங்களில் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தி வருகிறார்கள்.

தண்டனை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. தண்டனை சட்ட பிரிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் இந்த சட்டத்தில் உள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் குறித்து மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் கூறியதாவது:
உதாரணமாக, குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற அடிப்படை நடைமுறையில் மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் 40 நாட்களுக்குள் ஆஜர்படுத்தலாம் என்று புதிய நடைமுறையில் கூறப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது அவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி செய்யும் வழக்கறிஞர்களும் விசாரணை வளையத்திற்குள் வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கறிஞர்களுக்கு தரப்பட்டுள்ள உரிமையை முழுவதும் கபளீகரம் செய்து வழக்கறிஞர் தொழில் செய்யவிடாமல் செய்துவிடும்.

குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 107ல் புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்துடன் குற்றத்தில் சம்பந்தப்பட்ட சொத்துகளை ஜப்தி, பறிமுதல் செய்வதற்கான அதிகாரம் இந்த சட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கும் கால அளவு 15 நாட்களுக்குள் இருக்க வேண்டும். இது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வழக்குகளில் 40 நாட்களாகவும், 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வழக்குகளில் 60 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாமீன் பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.

புகாரையோ, பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ள வழக்கையோ திரும்ப பெற வேண்டுமானால் புகார்தாரருக்கோ, பாதிக்கப்பட்டவருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வாதங்களை கேட்காமல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கூடாது. குற்றப்பத்திரிகை நகல் குற்றவாளிக்கு மட்டுமல்லாமல், கோரும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவருக்கும் கட்டணமில்லாமல் தரப்பட வேண்டும். மூன்று முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை தரக்கூடிய குற்றங்களை பதிவு செய்ய காவல்துறை துணை கண்காணிப்பாளரின் முன் அனுமதி பெற்று குற்றத்தின் தன்மை, கடுமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு 14 நாட்களுக்குள் முதல் நிலை விசாரணை நடத்தலாம்.

பிரிவு 232ல் குற்றத்தை விசாரணைக்கு எடுத்த தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். விசாரணையின் முன்னேற்றம் குறித்து பாதிக்கப்பட்டவருக்கு தகவல் தர வேண்டும். பிரிவு 43 (3)ல் கொடுங்குற்றமான கொலை, பாலியல் பலாத்காரம், திராவக வீச்சு, கள்ள நாணயம், கள்ள ரூபாய் தயாரிப்பு, மனித கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் ஆகிய குற்ற செயல்களில் ஈடுபடுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ெசல்லும்போது கை விலங்கு அணிவிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை கைவிலங்கு அணிவிப்பது மனித உரிமை மீறல் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது கை விலங்கு கொடூர குற்றங்களுக்கு கட்டாயம் என்று மாற்றப்பட்டுள்ளது.

குற்றவாளி மற்றும் சூழலை கருத்தில்கொண்டு கூடுதல் போலீசாரை அமர்த்தவும், குற்ற தடுப்பு ஆவணங்களை பயன்படுத்தவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அதிலிருந்து 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரிவு 258ல் கூறப்பட்டுள்ளது. சாட்சிகள், ஆவணங்கள் தயாரித்தல், குற்றவாளிகளை தப்பித்தல் போன்ற சிக்கல்கள் இருக்குமானால் நீதிமன்றங்களால் குறிப்பிட்ட காலத்தில் தீர்ப்பளிப்பது சாத்தியமானதாக தெரியவில்லை.

பிரிவு 185ல் புலன் விசாரணையின்போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தி விசாரணையை பதிவு செய்யலாம். அந்த பதிவு குறிப்புகளை 48 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள நீதித்துறை நடுவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரிவு 530ல் வழக்கு விசாரணை மற்றும் வழக்கு நடைமுறைகள் மின்னணு முறையில் நடைபெற வேண்டும். சம்மன்கள், பிடிவாரன்ட், சாட்சி விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகளும் மின்னணு முறையில் நடைபெற வேண்டும். பிரிவு 356ல் குற்றவாளி இல்லாத நிலையில் வழக்கு விசாரணை செய்வதற்கும், தீர்ப்பளிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று பல நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த குற்ற விசாரணை நடைமுறையில் இருந்து மாறுபட்டுள்ளதால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பெரும் தேக்கமும், தாமதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்தவித அடிப்படை கட்டுமானமும் இல்லாமல் மின்னணு புகார், மின்னணு வழக்கு பதிவு, மின்னணு சாட்சிய பதிவு என்பது தற்போதைக்கு சாத்தியமில்லை. நீதிமன்றங்களின் பணிகளை எளிதாக்குவதற்கு பதில் நீதிமன்றங்களுக்கு கூடுதல் சுமையையே இந்த திருதங்கள் ஏற்படுத்துகின்றன.

சட்ட கல்லூரிகளுக்கும் புதிய சிக்கல்
சட்ட கல்லூரிகளில் இதுவரை பழைய சட்டங்களான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்கள் என்று படிக்கும் மாணவர்கள் புதிய சட்ட பிரிவுகளை கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விரிவுரையாளர் வழக்கறிஞர் மகாவீர் சிவாஜி கூறும்போது, ‘‘அரைவேக்காட்டுத்தனமாக இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது சட்ட மாணவர்களுக்கும், அவர்களுக்கு கற்பிக்கும் பேராசிரியர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். சட்டங்களின் பெயர் மட்டுமல்லாமல் பிரிவுகளிலும், நடைமுறைகளிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மாணவர்களை குழப்பிவிடும்.

சட்ட கல்லூரி விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் மீண்டும் இந்த 3 சட்ட புத்தகங்களை புரட்டி பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 3 ஆண்டு சட்ட படிப்பில் முதல் இரண்டு ஆண்டுகள் பழைய சட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் புதிய சட்டத்தை கற்றுத்தருவது சட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. படிப்படியாக சட்ட பிரிவுகளை மாற்றம் செய்து சட்ட திருத்தம் கொண்டுவருவதை விட்டுவிட்டு இப்படி ஒரே நேரத்தில் 3 முக்கிய சட்டங்களில் மாற்றம் செய்திருப்பது பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

The post வழக்கறிஞர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் புதிய ஷரத்துகளை சேர்த்துள்ளதால் குற்றவியல் சட்டங்களில் குழப்பங்கள்: பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: