சொத்தை அபகரித்த அதிமுக பெண் கவுன்சிலர்: உணவளிக்க மறுப்பதாக கலெக்டரிடம் தந்தை புகார்

திருப்பூர்: சொத்தை அபகரித்து உணவளிக்க மறுப்பதாக அதிமுக பெண் கவுன்சிலர் மீது கலெக்டரிடம் தந்தை புகாரளித்தார். திருப்பூரை சேர்ந்த 81 வயது முதியவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அதிமுக கவுன்சிலர். இளைய மகள் சென்னையில் வசித்து வருகிறார். முதியவருக்கு சொந்தமான வீடு அவிநாசி ரோடு, பெரியார் காலனியில் உள்ளது. அந்த வீட்டை மூத்த மகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவருடைய தந்தைக்கு உணவளிக்காமலும், மருத்துவ செலவிற்கு பணம் கொடுக்காமலும் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் முதியவர் தனது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார்.

எனவே அபகரித்த வீட்டை மீட்டுத்தருமாறு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு அளித்துள்ளார். கலெக்டர் மனுவின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது குறித்து அதிமுக கவுன்சிலரின் கணவர் கூறுகையில், ‘குறிப்பிட்ட வீட்டிற்கான பணம் ரூ.28 லட்சத்தை முன்பே மாமனாரிடம் கொடுத்து விட்டோம். அதை வைத்துதான் அவருடைய இளைய மகளுக்கு திருமணம் செய்தார். ஆனால் அந்த பத்திரம் அடமானத்தில் இருந்ததால் கிரையம் செய்யவில்லை. வீட்டை எனது மாமனார் இளைய மகளுக்கு தானசெட்டில்மெண்ட் செய்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்’ என்றார்.

The post சொத்தை அபகரித்த அதிமுக பெண் கவுன்சிலர்: உணவளிக்க மறுப்பதாக கலெக்டரிடம் தந்தை புகார் appeared first on Dinakaran.

Related Stories: