ஆவடி மாநகராட்சியில் தரமற்ற முறையில் கழிவு நீரை அகற்றாமல் மழைநீர் வடிகால் பணி: வைரலாகும் வீடியோ

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் உள்ள 43வது வார்டில், தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றாமல் அதிலேயே கான்கிரீட் கலவையை ஊற்றி, மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆவடி மாநகராட்சியின் 43வது வார்டு வசந்தம் நகரில் உள்ள குமாரசாமி தெருவில் மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை மழை நீர் வடிகால் அமைப்பதற்காக கான்கிரீட் கலவையை ஊற்றும் பணி நடந்தது. அப்போது, மழை நீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டி வைக்கப்பட்ட குழியில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதை அறிந்தும், அந்த கழிவுநீரை அகற்றாமல் அதிலேயே, கான்கிரீட் கலவையை ஊற்றி மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

இதனால், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதை அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவு செய்தார். இந்நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், துர்நாற்றம் வீசும் கழிவுநீரை அகற்றாமல் அதிலேயே, கான்கிரீட் கலவையை ஊற்றி மழை நீர் வடிகால் பணியை, அலட்சியப் போக்கில் செய்யும் ஊழியர்களை, பணியிட நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் ஒப்பந்ததாரரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஆவடி மாநகராட்சியில் தரமற்ற முறையில் கழிவு நீரை அகற்றாமல் மழைநீர் வடிகால் பணி: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Related Stories: