பேச்சிப்பாறை அணை பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் 107 வது நினைவு தினம்

குலசேகரம்,செப்.26: குமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சிப்பாறை அணை.  நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை திருவிதாங்கூர்  மன்னர்   மூலம் திருநாள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அணை  கட்டுவதில் ஆங்கிலேய பொறியாளரான ஹம்பிரே அலெக்சாண்டர் மிஞ்சின் முக்கிய  பங்காற்றினார். இவரது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று  நிறைவடைந்தது. அடர்ந்த காட்டு பகுதியில்  இவரது அயராது உழைப்பு மன்னரை  வியக்க வைத்தது. பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர் இங்கிலாந்தில்  1868 ம் ஆண்டு அக்டோபர் 8 ல் பிறந்தார்.  1913 ம் ஆண்டு செப்டம்பர் 25 ல் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.  இவரது மறைவு மன்னரை அதிர்ச்சியடைய செய்தது. இவர் மீது கொண்ட நன்மதிப்பால்  மன்னர் பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் உடலை  நாகர்கோவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வர செய்து பேச்சிப்பாறை அணை பகுதியில்  அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார். அவரது தன்னலமற்ற சேவையை நினைவு கூரும்  வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான அக்டோபர் 8, நினைவு நாளான  செப்டம்பர் 25 ஆகிய நாட்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள்  பிரதிநிதிகள் திரண்டு பேச்சிப்பாறை அணையிலுள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை  செலுத்துவது வழக்கம்.

இதேபோன்று 107 வது  நினைவு தினமான நேற்று விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மலரஞ்சலி  செலுத்தினர். நாம் தமிழர் கட்சியினர் பேச்சிப்பாறை பஸ் நிலையத்திலிருந்து  ஊர்வலமாக வந்து நினைவிடத்தில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி நீர்நிலை  காப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். திருவட்டார் ஒன்றிய செயலாளர்  லாரன்ஸ் பெனடிக்ட் தலைமை வகித்தார். பத்மநாபபுரம் தொகுதி தலைவர் அகமது  கபிர், தொகுதி மகளிர் பாசறை தலைவர் ஜாஸ்பின் சுனிதா ஜோஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மன்னர் பிறந்த தினவிழா பேச்சிப்பாறை  அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி மற்றும் நிதி வழங்கி அணை  உருவாவதற்கு மூல காரணமாக விளங்கிய திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாள் இராமவர்மா பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று பேச்சிப்பாறை அணையில் இந்து  அமைப்புகள் சார்பில் மன்னர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. இதில் விஸ்வ இந்து பரிசத் மாநில இணை செயலாளர் காளியப்பன்,  இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் செல்லன் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: