வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வாரமே அவகாசம் உள்ளதால் திருவண்ணாமலை, ஆரணி தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் விரிவான ஏற்பாடுகள்

திருவண்ணாமலை, மே 26: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளதால், விரிவான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளது. எனவே, அதற்கான இறுதி கட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரணி தொகுதிக்கும் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதையொட்டி, அங்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவை பகலாக்கும் வகையில் மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். அதோடு, வாக்கு எண்ணும் மையங்களில், வேட்பாளர்களின் முகவர்கள் தங்கியிருந்து, கண்காணிப்பு காமிராவில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். மேலும், திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, தேர்தல் நடத்தும் அலுவலர்களான கலெக்டர் பாஸ்கரபாண்டியன், டிஆர்ஓ பிரியதர்ஷினி ஆகியோர் நேரில் சென்று நேற்று ஆய்வு நடத்தினர்.வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையை நேரில் பார்வையிட, ஒரு வேட்பாளருக்கு 90 முகவர்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு 6 தனித்தனி அறைகளில் தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். திருவண்ணாமலை மற்றும் ஆரணிதொகுதிகளில் தலா 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அதன்படி, திருவண்ணாமலையில் தொகுதியில் போட்டியிடும் 31 வேட்பாளர்களின் சார்பில் 2790 முகவர்கள், ஆரணி தொகுதியில் போட்டியிடும் 29 வேட்பாளர்களின் சார்பில் 2610 முகவர்கள் உள்பட மொத்தம் 5400 முகவர்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 4ம் தேதி காலை 7 மணிக்குள், வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வந்து விட வேண்டும். முகவர்களுக்கான உணவு வசதியையும், மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. எனவே, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வெளியில் இருந்து உணவை வாக்கு என்னும் மையங்களுக்குள் கொண்டுவர அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், செல்போன் கொண்டுவரவும் அனுமதியில்லை. வாக்கு என்னும் மையத்தின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே முகவர்கள் அனைவரும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அதன்பிறகு, சுமார் 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த எண்ணிக்கை அனைத்தும் முடிந்த பிறகு. ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 ஒப்புகை ரசீது இயந்திரங்கள்(விவிபேட்) என்ற அடிப்படையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு 30 ஒப்புகை ரசீது இயந்திரங்கள், ஆரணி மக்களவைத் தொகுதிக்க 30 ஒப்புகை ரசீது இயந்திரங்களில் பதிவான வாக்கு சீட்டுகள் எண்ணப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

The post வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வாரமே அவகாசம் உள்ளதால் திருவண்ணாமலை, ஆரணி தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் விரிவான ஏற்பாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: