10 இடங்களில் நாளை வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம் அதிகாரிகள் தகவல்

வேலூர். மே 26: வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 10 இடங்களில் நாளை வருங்கால வைப்புநிதி குறை தீர்வு நடக்கும் நடக்கிறது. வருங்கால வைப்புநிதி நிறுவனம் ‘இபிஎப்ஓ’ ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ என்ற வைப்பு நிதி உங்கள் அருகில் எனும் முகாமை ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி சந்தாதாரர் குறைகளை களைகிறது. கடந்த மாதத்தை தொடர்ந்து இம்மாதம் வரும் 27ம் தேதி (நாளை) காலை 9 மணிமுதல் மாலை 5.45 மணி வரை வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 10 இடங்களில் முகாம்கள் நடக்கிறது. அதன்படி வேலூர் அலுவலகம் சார்பில் காட்பாடி க்ளூனி கான்வென்ட் பள்ளி வளாகம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்தி நகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகம், ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் சிஎஸ்ஐ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கவளாகத்திலும் முகாம்கள் நாளை நடக்கிறது. இதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, காரைக்கால் என வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 10 இடங்களில் முகாம் நடக்கிறது.

இம்முகாம்களில், இபிஎப் மற்றும் எம்பி சட்டம் 1952ன் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குதல், முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல் போன்றவை நடைபெறும். அத்துடன்,தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல், யுஏஎன் கேஓய்சிகளை இணைப்பதற்கான உதவி, இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் போன்றவை நடைபெறும். இதுதவிர இம்மாதத்துக்கான மைய கருப்பொருளாக உறுப்பினர் ஓய்வூதியம் மற்றும் இறப்பு ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அனாதை ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான சேவைகள் நடைபெறும்.

 

The post 10 இடங்களில் நாளை வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: