தூத்துக்குடியில் தடையின்றி பாலித்தீன் பயன்பாடு

ஸ்பிக்நகர், பிப். 4: தமிழகத்தில் கடந்தாண்டு ஜன. 1ம் தேதி முதல் பாலித்தீன் கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சமீபகாலமாக தூத்துக்குடி ஸ்பிக் நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடை, பேக்கர், ஓட்டல் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பாலித்தீன் கவர்களில் டீ, காபி மற்றும் ஓட்டல்களில் சட்னி, சாம்பார் போன்றவற்றை சூடாக கட்டி கொடுக்கின்றனர். இதனால் பாலித்தீன் கவரில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக ரசாயனம் பூசப்பட்ட இலைகள் பயன்பாடும் உள்ளது.

மண் வளத்தையும், உடல் நலத்தையும் பாதுகாக்கும் வகையில் பாலித்தீன் தடை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அதன் பயன்பாடு அதிகரித்து உள்ளது. எனவே இதனை ஆரம்பத்திலேயே தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட போது அதிகாரிகள் அதிரடி காட்டினர். ஆனால் தற்போது சோதனையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டிய சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறையும் முனைப்புடன் செயல்படாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories: