மக்களின் அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை ஊராட்சி தலைவரான மூதாட்டி பேட்டி

மேலூர், ஜன.7: மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை தருவேன் என ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட 79 வயது மூதாட்டி கூறினார். மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது அரிட்டாபட்டி ஊராட்சி. இங்கு 4 பெண்கள் உட்பட 7 பேர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டு 79 வயதுள்ள வீரம்மாள் என்ற மூதாட்டி தலைவர் பதவியை பிடித்தார். கணவனை இழந்து 2 மகன்களுடன் வசிக்கும் இவர் கடந்த 2 முறையும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்டவர். மூன்றாவது முயற்சியில் வெற்றிக் கனியை கைப்பற்றிய இவர் நேற்று அரிட்டாபட்டியில் உள்ள அலுவலகத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு உள்ளாட்சி துறை தேர்தல் உதவியாளர் முத்துக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றுக் கொண்ட வீரம்மாளுக்கு கிராம மக்கள் மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.கிராமத்திற்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை தருவேன் என வீரம்மாள் கூறினார்.

Related Stories: