திருப்பரங்குன்றம், ஜன. 14: மதுரை, பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், ராஜேந்திரபாபு அறக்கட்டளை சார்பில் நேற்று பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதன்படி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் இணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு, இறைவனுக்கு படைத்தனர்.
இந்த விழாவில் கல்லூரி தலைவர் மு.விஜயராகவன், கவுரவத் தலைவர் பொறியாளர் சு.ராஜகோபால், செயலாளர் பொறியாளர் சு.ரா.தர், நிர்வாகிகள் ரா.ஜெயராம், ந.சுரேந்திரன், பொருளாளர் ஆழ்வார்சாமி உள்ளிட்டோருடன், கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை, முனைவர் லோகநாயகி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
