பயிர்காப்பீட்டு நிலுவை தொகை கோரி கோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசில் விவசாயிகள் நூதன போராட்டம்

கோவில்பட்டி, அக். 27: 2018-19ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2018-19ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போதைய விவசாய செலவுகளுக்கு ஈடுகட்டும் வகையில் நிலுவை தொகையை முழுமையாக அனைவருக்கும் வழங்கக்கோரி தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தலையில் காலி உரக்சாக்கு பைகளால் மூடியவண்ணம் திரளாகப் பங்கேற்ற விவசாயிகள், பின்னர் திடீரென ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், இயற்கை விவசாய சங்க மாவட்டத் தலைவர் கருப்பசாமி, கயத்தாறு ஒன்றியத் தலைவர் மாரியப்பன், இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் குருராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுவை ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் அளித்து சென்றனர்.

Related Stories: