சாத்தான்குளம் அருகே திருவாவடுதுறை இடம் ஆக்கிரமிப்பு

சாத்தான்குளம், ஜூன் 12: சாத்தான்குளம் அருகே திருவாவடுதுறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து முள்வேலி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் குவிந்தனர். இதனை அறிந்த காவல்துறை, வருவாய்த்துறையினர் சமாதானப்படுத்தினர். சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பிரகாசபுரம் மேல நடுவக்குறிச்சிக்கு இடையே திருவாவடுதுறைக்கு சொந்தமான 13 ஏக்கருக்கு மேல் இடம் உள்ளது. இந்த இடத்தை கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். அங்கு இசக்கிஅம்மன் கோயிலும் ஊராட்சி சார்பில் மகாத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் அமைத்த குளமும் உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை அவர், வேறு நபருக்கு உள்குத்தகை விட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர், அந்த இடத்தில் நேற்று முள்வேலி அமைத்து அடைத்துள்ளார். இதனையறிந்த நடுவக்குறிச்சி, தாமரைமொழி கிராம மக்கள் திரண்டு வந்து எதிர்த்து தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த நடுவக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் டாலி சுபலா, தட்டார்மடம்   இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தற்போது தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடப்பதால் அடுத்த வாரம் தனிநபரையும் அழைத்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: