பள்ளிபாளையம் அருகே பட்டா கொடுத்து 5 ஆண்டுகள் ஆகியும் நிலம் வழங்காத அவலம்

பள்ளிபாளையம், ஜூன் 7: பட்டா, பத்திரம் கொடுத்து 5 ஆண்டுகள்  ஆகியும், அதற்கான இடத்தை வழங்காமல் வருவாய்த்துறையினர் அலைக்கழித்து வருவதாக ஆவாரங்காடு பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளிபாளையம் ஓடப்பள்ளி காவிரி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்காக தண்ணீரை 12 அடி உயரத்திற்கு தேக்குவதால் பள்ளிபாளையம், ஆவாரங்காடு, பெரியார் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதியில் காவிரி கரையோரத்தில் குடிசை வீடுகள்  தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், 5 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் வசித்த 335 குடும்பத்தினருக்கு, காடச்சநல்லூர் ஊராட்சி மண்கரடு என்ற பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடம் சமதளமாக இல்லாமல் சிறு குன்றுகளாக இருந்ததால், பட்டா பெற்றவர்களால் அங்கு வீடு கட்ட முடியவில்லை.

இதையடுத்து, மாவட்ட கனிமவளத்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு, குன்றில் இருந்த மண் மற்றும் கற்கள் அகற்றி, சமதளமாக மாற்றும் பணி ஓராண்டில் நிறைவடைந்தது. ஆனால், அதன் பின்னர 4 ஆண்டுகளாகியும், இதுநாள் வரை  இந்த நிலம் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. சினிமாவில் நடிகர் வடிவேலு, பத்திரத்தை காட்டி கிணறு இல்லையே என்று புலம்புவதை போல, ஆவாரங்காடு மக்கள் தங்களிடம் உள்ள பட்டாவை காட்டி, இதற்கான நிலத்தை காணவில்லை என கேட்டு வருகின்றனர். இருந்த போதிலும் வருவாய்த்துறை அதிகாரிகள், இதைப்பற்றி கொஞ்சமும் அலட்டி கொண்டதாக தெரியவில்லை. தங்களுக்குரிய இடத்தை ஒப்படைக்காவிட்டால், ஒட்டுமொத்த பட்டாக்களை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: