ஊடக கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி

நாமக்கல், மார்ச் 12: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது மற்றும் ஊடகங்களை கண்காணிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவு படி நடைபெற்ற பயிற்சிக்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.

கண்காணிப்பு குழுவின் முக்கிய பணிகள், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் செயல் பாடுகள் குறித்து பயிற்சியில் விளக்கப்பட்டன. அரசியல் கட்சிகள் வெளியிடும் விளம்பரங்களுக்கு முன்கூட்டியே அனுமதி அளித்தல். அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் பிரசார நேரத்தை முறைப்படுத்துதல். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஊடக ஒளிபரப்புகளை ஒழுங்கு படுத்துதல், சுழற்சி முறையில் 24 மணிநேர கண்காணிப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஊடக கணண்காணிப்பு குழுவில் தலா 3 பேர் கொண்ட 3 குழுக்கள் மொத்தம் 9 பேர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிவி, வானொலியில் வெளியாகும் தேர்தல் தொடர்பான செய்திகளை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இக்குழுவினர் கண்காணிப்பார்கள். சமூக ஊடக கண்காணிப்பானது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களை கண்காணிக்க செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தலைமையில் 4 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டருக்கு உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கப்படும் என பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: