புவி அமைப்பியல் துறைத்தலைவர் மீது நடவடிக்கைகோரி கரூர் அரசு கல்லூரி 3ம் ஆண்டு மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

கரூர் : கரூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புவி அமைப்பியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புவியியல் துறை மூன்றாமாண்டு மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.கல்லூரியில் உள்ள புவி அமைப்பியல்துறைத் தலைவர் தலைமையில், முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை கடந்த சில ஆண்டுகளாக பீல்டு ட்ரிப் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, கரூர் மாவட்டம், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுதும் இந்த மாணவர்கள் அவ்வப்போது அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் போது, மாணவர்களிடம் இருந்து முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை பயிலும் மாணவர்களிடம், ரூ.5ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வசூல் செய்து கொண்டு, அவற்றுக்கு முறையாக கணக்கு காட்டப்படுவதில்லை என்ற புகார் கடந்த சில மாதங்களாக எழுந்து வந்துள்ளது. மேலும், மாணவிகளை தலையில் கொட்டுவது, நேரம் கடந்தும் வகுப்புகளை நடத்துவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் புகாராக ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், மாணவர்களின் புகார் குறித்து துறைத்தலைவரிடம் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு நேற்றுமுன்தினம் கல்லூரிகள் வழக்கம்போல செயல்படத்துவங்கியது. இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில், புவி அமைப்பியல்துறை மூன்றாமாண்டு மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவு வாயில் பகுதியில், வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, கமிட்டி விசாரணை முடிவு வரும் வரை காத்திருங்கள், இப்போது வகுப்புகளுக்கு செல்லுங்கள் என தெரிவித்தார். ஆனால், எவ்வளவு நாட்கள்தான் நாங்கள் இந்த பிரச்னை குறித்து உங்களிடம் முறையிடுவது, இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.இதனைத் தொடர்ந்து துறை பேராசிரியர்கள் மற்றும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது….

The post புவி அமைப்பியல் துறைத்தலைவர் மீது நடவடிக்கைகோரி கரூர் அரசு கல்லூரி 3ம் ஆண்டு மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: