முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90.42 கோடிக்கான காசோலை: அறநிலையத் துறை ‘ஷாக்’

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில், பிரசித்தி பெற்ற முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதற்காக கோயிலின் முன் பகுதியில், ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை அறநிலையத்துறை அதிகாரிகள், மாதம் ஒருமுறை திறந்து, அதில் இருக்கும் காணிக்கையை எடுத்து, அன்னதானம் வழங்கி வருகின்றனர். நேற்று முன்தினம், முனியப்பன் கோயிலில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. அப்போது அந்த உண்டியலில் ஒரு காசோலை இருந்தது.

அந்த காசோலையில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 என எழுதியிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காசோலையில் மகேந்திரா டெக்னாலஜி என்றும், சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலை என தெரியவந்தது. அந்த காசோலைக்கான கணக்கு, தர்மபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா?, என சவுத் இந்தியன் வங்கிக்கு சென்று, காசோலையை காட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். முனியப்பன் கோயில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகை போடப்பட்டது, அப்பகுதியில் பேசும் பொருளாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ கோயில் உண்டியலில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 என எழுதியிருந்த காசோலை ஒன்றை பக்தர் காணிக்கையாக செலுத்தியிருந்தார். அந்த காசோலையை எடுத்துச்சென்று சம்மந்தப்பட்ட வங்கியில் விசாரித்த போது, அந்த கணக்கில் பணம் எதுவும் இல்லை. அந்த காசோலையை யார் போட்டார்கள் என விசாரிக்கிறோம்,’ என்றனர்.

The post முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90.42 கோடிக்கான காசோலை: அறநிலையத் துறை ‘ஷாக்’ appeared first on Dinakaran.

Related Stories: