கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பேரவையில் புள்ளி விபரங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பை சட்டசபையில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் கள்ள சாராயத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை 4,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,959 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 94 லிட்டர் அழிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டில் மொத்தம் 2,763 புகார்களும், இந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை 1,343 புகார்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 654 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 970 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து ரூ.19 கோடியே 75 லட்சத்து 35 ஆயிரத்து 72 மதிப்பிலான 2 லட்சத்து 93 ஆயிரத்து 941 லிட்டர் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

2 லாரிகள், 8 வேன்கள், 217 கார்கள், 15 ஆட்டோக்கள், 12 படகுகள் மற்றும் 2,924 மோட்டார் சைக்கிள்கள் உள்பட மொத்தம் 3,178 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மதுவிலக்கு குற்றங்களில் தொடர்புள்ள 306 கொடுஞ்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 74 ஆயிரத்து 491 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 73,680 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 கோடியே 26 லட்சத்து 94 ஆயிரத்து 368 ரூபாய் மதிப்பிலான 1 லட்சத்து 52 ஆயிரத்து 819 லிட்டர் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், 84 லட்சத்து 20 ஆயிரத்து 940 ரூபாய் மதிப்பிலான சாராய ஊறல்கள் 4 லட்சத்து 21 ஆயிரத்து 47 லிட்டரும், 59 லட்சத்து 23 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பிலான கள்ள சாராயம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 94 லிட்டரும், 5 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான எரிசாராயம் 5 ஆயிரத்து 475 லிட்டரும், 7 லட்சத்து 25 ஆயிரத்து 480 ரூபாய் மதிப்பிலான கள் 36 ஆயிரத்து 274 லிட்டரும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. 3 லாரிகள், 120 கார்கள், 29 ஆட்டோக்கள், 3 படகுகள் மற்றும் 1,329 மோட்டார் சைக்கிள்கள் உள்பட மொத்தம் 1,484 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மதுவிலக்கு குற்றங்களில் தொடர்புள்ள 95 கொடுங்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* மதுவிலக்கு திருத்த மசோதா இன்று அறிமுகம்
சட்டப்பேரவையில் மதுவிலக்கு திருத்தச்சட்டம் மசோதா இன்று அறிமுகப்படுத்தப்படும் என்றுபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது குறுக்கிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதைத் தான் மீண்டும் உறுப்பினர் ஜி.கே.மணி இங்கே எடுத்துப் பேசத் தொடங்கியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று இன்று சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரத்தை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.

* பேரவையில் இன்று
சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பொதுவாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவார். மேலும், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். தொடர்ந்து, இந்த சட்டசபை கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும். அதற்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிடுவார்.

The post கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பேரவையில் புள்ளி விபரங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: