பர்கூர் மலைப்பகுதியில் 13 குழந்தை பெற்ற பழங்குடியின பெண்ணின் கணவருக்கு கு.க.: கெஞ்சி கூத்தாடி சாதித்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டு

ஈரோடு: பர்கூர் மலைப்பகுதியில் 13வது குழந்தையை பிரசவித்த பழங்குடியின பெண்ணின் கணவருக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது. இப்பணியை சிறப்பாக செய்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள கர்நாடக மாநில எல்லை பகுதியில் பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள ஒன்னகரை கிராமத்தை சேர்ந்த தம்பதியர் சின்னமாதன் (46), சாந்தி (45). சோழகர் பழங்குடியின இனத்தை சேர்ந்த இந்த தம்பதியர் கடந்த 25 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் தங்கள் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டும்,‌ கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இத்தம்பதிக்கு ஏற்கனவே 12 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 10 மாதத்துக்கு முன்பு சாந்தி மீண்டும் கருத்தரித்தார். இதையறிந்த மருத்துவ குழுவினர் அவரின் வீட்டுக்குச் சென்று அவருக்கு அதிக குழந்தைகள் பெற்று கொள்வதின் மூலம் ஏற்படும் உடல் பிரச்னைகள் குறித்து எடுத்து கூறினர். மேலும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு எவ்வளவோ எடுத்து கூறியும் அதற்கு மறுப்பு தெரிவித்தபடி, வேகமாக அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாந்தி மீண்டும் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த ஆண் குழந்தையுடன் சேர்த்து மொத்தம் சாந்திக்கு 13 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் 8 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் அடங்குவர். பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லாமல் 13 குழந்தைகளையும் சாந்தி வீட்டிலேயே பெற்றெடுத்துள்ளார். அதில் ஒரு முறை இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார். மேலும் இதுவரையிலும் மருத்துவமனைக்கு சாந்தி எந்த சிகிச்சைக்கும் சென்றதே இல்லை. முதலில் பிறந்த ஆண் குழந்தைக்கு தற்போது 25 வயது ஆகி, அவருக்கு திருமணமும் நடைபெற்று அவர் மனைவியுடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

இதற்கிடையே நேற்று அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர், பர்கூர் போலீசார், வருவாய்த்துறையினர் என அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் சின்ன மாதனின் வீட்டிற்கு சென்றனர். ஆண் குழந்தையை பார்வையிட்டு, உடல் நலத்தை மருத்துவர்கள் பரிசோதித்தனர். குழந்தை 3 கிலோ எடையுடன் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்த மருத்துவ குழுவினர், சாந்தியின் உடலை பரிசோதனை செய்ததில் ரத்தத்தின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டதை கண்டறிந்தனர். தொடர்ந்து, சாந்தியிடம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவமனைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், எவ்வளவோ எடுத்துக்கூறியும் சாந்தி வர மறுத்துள்ளார்.

இந்நிலையில், சின்ன மாதனிடம் மருத்துவர் சக்தி கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சின்ன மாதன் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஒருவழியாக சம்மதித்தார். இதையடுத்து சின்ன மாதனை உடனடியாக அங்கிருந்து அழைத்து கொண்டு மருத்துவ குழுவினர் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு வைத்து சின்னமாதனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னர் சின்னமாதன் நலமுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன் கூறுகையில், ‘‘மருத்துவ குழுவினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் மற்றும் பழங்குடி இன மக்கள் சங்க தலைவர் என அனைவரும் பேசி சின்னமாதனை அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தோம். அவரது குடும்பத்திற்கு அறுவை சிகிச்சைக்கு பின்பு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 5 நாட்களுக்கு தேவைப்படும் உணவு பொருட்கள், குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் வழங்கப்பட்டது’’ என குறிப்பிட்டார்.

இதையடுத்து, அறியாமையில் இருந்த பழங்குடி இன குடும்பத்தினரை 8வது முறையாக அணுகி, குடும்ப அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைத்து சாதித்த வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான குழுவினருக்கும், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் ராஜசேகரனுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

Related Stories: