சேலம்-பாலக்காடு 4 வழிச்சாலையில் அனுமதியின்றி பாதை ஏற்படுத்தும் தனியார் உணவகங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

மதுக்கரை: சேலம்-பாலக்காடு நான்கு வழிச்சாலையில் மாவுத்தம்பதி, பிச்சனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தினர்  அனுமதியின்றி பாதை ஏற்படுத்தி இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் பைபாஸ் ரோட்டில் மதுக்கரை மரப்பாலத்தில் இருந்து வாளையார் வரை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பிச்சனூர் மற்றும் மாவுத்தம்பதி ஊராட்சி பகுதிகளில் பேக்கரி மற்றும் உணவகங்கள் நடத்தி வருபவர்கள் தங்களின் வசதிக்காக வியாபார நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் முறைப்படி அனுமதி வாங்காமல் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை மூடிவிட்டு ஆங்காங்கே சாலை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் மழை காலங்களில் மழைநீர் ரோட்டில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,

அதுமட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு செல்வதற்காக திடீரென வாகனத்தை நிறுத்தும்போது பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் நிலைகுலைந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.சில மாதங்களுக்கு முன்பு தான் விபத்து ஏற்படும் வகையில் அனுமதியின்றி போடப்பட்ட பாதைகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அடைத்து சென்றனர். ஆனால் தற்போது அவர்கள் அடைத்து சென்ற இடங்கள் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் தனியார் நிறுவனத்தினர் பாதை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதிகளில் விபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது, எனவே அனுமதியின்றி பாதை ஏற்படுத்தியுள்ள தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதைகளை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: