ஓடும் பேருந்தில் பயங்கர தீ பயணிகள் அலறி ஓட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரவு ஓடும் ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர்.புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு 9.30 மணிக்கு புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 13 பயணிகளுடன் பொள்ளாச்சிக்கு புறப்பட்டது. புதுச்சேரி 100 அடி சாலை மேம்பாலத்தில் இப்பேருந்து சென்ற போது திடீரென பேருந்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பேருந்தின் பின்னால் வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பார்த்துவிட்டு பேருந்து டிரைவரிடம் தெரிவித்துள்ளார். உடனே டிரைவர் ஆம்னி பேருந்தை மேம்பாலத்திலேயே நிறுத்தியவுடன் பேருந்து முழுவதுமாக புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் பயந்து போன பயணிகள் உடமைகளை அப்படியே விட்டுவிட்டு உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.

தொடர்ந்து சில நிமிடத்தில் பேருந்தின் முன்பக்கம் தீப்பற்றி எரிய தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து பயணிகள் போலீசாருக்கும், புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் நூறடி சாலையின் இருபுறமும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் மாற்றிவிடப்பட்டது. இதனால் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தீவிபத்தில் பேருந்தில் சென்ற 13 பயணிகள், ஓட்டுனர், நடத்துனர் என மொத்தம் 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் இத்தீவிபத்தில் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திடீரென ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: