‘வீணாய் போன ஆள் அண்ணாமலை’ திமுக அரசின் திட்டத்தை காப்பி அடித்த மோடி: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

கோவில்பட்டி: திமுக அரசின் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தை உ.பி.யில் அமல்படுத்த பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார் என்று கோவில்பட்டியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள மகளிருக்கான இலவச பஸ் திட்டத்தினை பார்த்து, உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் எங்களுக்கு வாக்களித்தால் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதிலிருந்து இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய முன் மாதிரியான பல திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ளலாம்.

திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆரியர்களுக்கு எதிரான ஆட்சி. பாஜ ஆளும் மாநிலங்களில் பயங்கரமான ஊழல் நடைபெற்று வருகிறது. அங்கு எல்லாம் ஆளுநர்கள் வாய் பொத்தி மவுனமாக இருக்கின்றனர். ஆனால் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநில முதல்வர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர்களை வைத்துள்ளனர். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 85 சதவீதத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு பெண்கள் முதல்வரை தனது மகனாக, சகோதரனாக கருதி வருகின்றனர். பெண்கள் ஒரு கட்சியை ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் 10 ஆண்டுகளுக்கு அந்த ஆட்சி, கட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

அண்ணாமலை என்ற ஒருத்தர் ஆணாய் பிறந்து வீணாய் போன ஆள். என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை. இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதிமுகவினருக்கு சொரணை இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் ஆளுமையை, அண்ணாமலை அவருடைய தாய், மனைவியுடன் ஒப்பிட்டு பேசுகிறார். நாங்கள் (திமுக) இந்திரா காந்தியையே பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள். இதை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.

Related Stories: