ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம் என்று இந்தியாவை மாற்ற பார்க்கிறார்கள்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

நாகர்கோவில்: ‘ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு மதம் என்று இந்தியாவை மாற்ற பார்க்கிறார்கள்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். நாகர்கோவிலில் நேற்று நடந்த தோள்சீலை போராட்ட 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: தோள்சீலை போராட்டம் நம் சரித்திரத்தில் மைல் கல் என கூறலாம். அதன் 200ம் ஆண்டு கொண்டாடும்போது கலந்துகொள்ள முடிகிறது என்பது மகிழ்ச்சி. கேரளத்தில் மார் மறைக்கும் சமரமும், தமிழ்நாட்டின் தோள்சீலை போராட்டமும் ஒன்றுதான். அந்த போராட்டத்தின் சமகால முக்கியத்துவும், அரசியல் முக்கியத்துவத்தையும் விளக்கும் வகையில் ஸ்டாலின் இங்கு வந்துள்ளார்.

திருவள்ளுவர், மகாகவி பாரதியார், பெரியார், வைகுண்டர், ராமலிங்கர், நாராயணகுரு, அய்யா வைகுண்டர் ஆகியோர் நினைவுகள் எனக்கு வருகின்றன. அவர்களின் புரட்சியால் ஏற்பட்ட இடதுசாரி சிந்தனைகள், பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நாம் ஏற்றெடுக்க வேண்டும். சனாதன தர்மம் என்ற பெயரில் சங்க பரிவார் பழைய மன்னராட்சியை கொண்டுவரப்பார்க்கின்றனர். ஜனநாயகம் இவர்களுக்கு அலர்ஜி. அக்காலத்தில் ஏற்பட்ட சமூக அநீதிகள் மறைந்துவிட்டதாக நாம் நினைக்க வேண்டாம். இன்று வேறு வடிவில் உள்ளது. அதனால்தான் வட இந்தியா மாநிலங்களில் தலித், பிற்படுத்தப்பட்டவர்கள் துன்பப்படுத்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் அரசியல் பெரும்பான்மை மதரீதியான சக்திகள் நாட்டுக்கு எதிராக மாறியுள்ளது. ஆட்சி திறமை என்ற பெயரில் நாட்டை மத அடிப்படியில் கொண்டுவர பார்க்கிறார்கள். மத சிறுபான்மையினரை பயமுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தாங்கள் உடைக்க முடியாத சக்தி என்ற பாஜ, தேசிய அரசியலில் உடைவதை இன்று காண முடிகிறது. பாஜகவுக்கு எதிராக பீகாரில் நிதிஷ் கட்சி நிற்கிறது. பாஜவின் மக்கள் விரோத போக்கால் ஹரியானாவில் தேவிலாலின் நூற்றாண்டு விழாவில் எதிர்கட்சிகள் பேரணி நடத்தின. 2024ல் பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற கோஷம் அதில் உயர்ந்தது. சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே பாஜவுடன் உள்ளது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட இடைத்தேர்தலில்களில் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த டெல்லி மாநகராட்சி பாஜக கையைவிட்டு போனது. இதெல்லாம் நாட்டில் வளர்ந்துவரும் அரசியலின் சரியான அறிகுறிகள். பாஜவின் துன்பத்தை மக்கள் அறிந்துகொள்கிறார்கள். அவை மக்கள் மத்தியில் எதிரொலிக்காமல் இருக்க சங்கபரிவார் பிரிவினை அஜண்டாவை புகுத்துகிறார்கள். ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம் என்று இந்தியாவை மாற்ற பார்க்கிறார்கள். திமுக மொழி பாதுகாப்பு போராட்டம் நடத்தியது.

மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமை நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கு தமிழக முதல்வருக்கு ஒரு அழைப்பை கொடுக்க விரும்புகிறேன். வைக்கம் போராட்டடத்தின் 100-ம் ஆண்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்தப்போகிறோம். அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் வரவேண்டும் என அழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: