தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாலை ஓரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பீங்கான் பொருட்கள் உடைத்து தீ வைக்கப்பட்டது குறித்து கலெக்டர், எஸ்பியிடம் தம்பதியினர் மனு கொடுத்துள்ளனர். கும்பகோணம் அருகே மாங்குடி நடுவக்கரையை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனார் சாலையோரத்தில் பீங்கானால் செய்யப்பட்ட ஊறுகாய் ஜாடிகள், உப்பு ஜாடிகள், அகல் விளக்குகள், அலங்கார பொம்மைகள் ஆகியவற்றை கடந்த ஓராண்டாக விற்பனை செய்து வந்தனர். பகல் நேரத்தில் வியாபாரம் செய்யும் இவர்கள், அதே இடத்தில் சமையல் செய்து சாப்பிட்டு விட்டு இரவு நேரத்தில் அங்கேயே தங்கி வந்தனர். நேற்று முன்தினம் தங்களது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராஜாவும், மாரியம்மாளும் பீங்கான் பொருட்கள் மீது சாக்குகளை போட்டு கட்டி வைத்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றனர்.
நேற்று காலை இருவரும் தஞ்சாவூருக்கு வந்து பார்த்தபோது, பீங்கான் பொருட்கள் எல்லாம் உடைக்கப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 2 பேரும் கதறி அழுதனர். பின்னர் இவர்கள் தஞ்சாவூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று பீங்கான் பொருட்கள் உடைக்கப்பட்டது குறித்து தெரிவித்தனர். ஆனால் அவர்கள் புகார் எதையும் வாங்கவில்லை. இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் ஆகியோரிடம் மனு அளித்தனர். இது குறித்து ராஜா-மாரியம்மாள் தம்பதியினர் கூறுகையில், நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஊர் ஊராக சென்று பீங்கான் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் அடித்து உடைத்ததுடன் தீ வைத்தும் எரித்துவிட்டனர். எங்களுடைய முதலீடு அனைத்தும் வீணாகிவிட்டது. ரூ.2 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.
பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் சாப்பாடு பொருட்கள் மற்றும் எங்கள் துணிகள் அனைத்தையும் தீ வைத்து எரித்து விட்டனர். தற்போது நாங்கள் வாழ்வாதாரம் இருந்து தவிக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இந்த சாலையில் வணிகவரித்துறை, அறநிலை துறை, தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக அலுவலகம், பெண்கள் காவல் நிலையம் மற்றும் சட்ட ஒழுங்கு காவல் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் எந்த ஒரு இடத்திலுமே சிசிடிவி கேமரா இல்லை. இந்த பகுதியில் அதிகமான குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு கத்தியுடன் திரிகின்றனர். இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் செல்வதற்கு மிகவும் அச்சமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்துவதோடு காவலர்களை இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் குற்றத்தை தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு கூறினர்.