மனைபட்டா வழங்கக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் -வாக்குவாதம்- பரபரப்பு

கடலூர் :  கடலூரில் மனைபட்டா வழங்கக்கோரி ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் அங்குசெட்டிபாளையம் பழைய காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது அவர்கள் இலவச மனைபட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் பலசுப்பிரமணியத்திடம் மனு வழங்கினர்.

மனுவை பெற்ற ஆட்சியர் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்சியரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்காக 6 ஏக்கர் 83 சென்ட் அளவுள்ள நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நாங்கள் அரசால் கொடுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடியேறினோம். இதை அறிந்த நில உரிமையாளர் அந்த நிலத்தை எங்கள் ஊரை சேர்ந்த வேறு ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டார். அவர் எங்களுக்கு மனைபட்டா கிடைக்காமல் தடுக்கும் உள்நோக்கத்துடன் 2000ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை அழைத்துப் பேசி 8 வாரங்களுக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. கடந்த 24.1.2023 அன்று மாவட்ட ஆட்சியர், பதிவுத்துறை தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி, அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய கூறியுள்ளார். இருப்பினும் இதுவரை அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யாமல் எங்களுக்கு மனைபட்டா வழங்காமல் உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் எங்கள் கிராமத்தை நேரில் ஆய்வு செய்து, எங்களுக்கு விரைவில் மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: