சத்தியமங்கலம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கதளி ரக வாழைத்தார் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில்  நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில்  கதளி ரக வாழைத்தார்களை வியாபாரிகள் போட்டி  போட்டு ஏலம் எடுத்தனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நேற்று நடைபெற்றது.  இந்த ஏலத்தில் சத்தியமங்கலம், கெம்பநாயக்கன்பாளையம், டி.ஜி.புதூர்,  சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, அரசூர், உக்கரம், செண்பகபுதூர்,  பெரியூர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைவித்த  வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.

நேற்று நடந்த ஏலத்திற்கு  1805 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் கதளி  ரகம் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய் வரை, நேந்திரன் 15 முதல் 21 ரூபாய்  வரையும் விற்றது. பூவன் ரக வாழை தார் ஒன்று 455 ரூபாய், தேன்வாழை 610,  செவ்வாழை 720, ரஸ்தாளி 410, பச்சை நாடன் 390, மொந்தன் 490 ரூபாய்க்கு  விற்பனையானது.

குறிப்பாக கதளி ரக வாழைத்தார்களை வியாபாரிகள் போட்டி போட்டு  ஏலம் எடுத்தனர். சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு  காரணமாக வாழைத்தார் விலை குறைந்து விற்பனையான நிலையில் தற்போது பனிப்பொழிவு  குறைந்து கதளி ரக வாழைத்தார்கள் விலை அதிகரித்து விற்பனை ஆனதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1805  வாழைத்தார்களும், 2.27 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாகவும் விவசாயிகளுக்கு  உடனடியாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும்  கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: