காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 1854 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதிமாதம் 2வது செவ்வாய் கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இரு மாதங்களுக்கு ஒருமுறை 2வது செவ்வாய்கிழமை, கூடுதல் கலெக்டர், (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் குறை கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாளை முதல் வரும் 10ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீலநிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறலாம்.