வாலாஜாவில் வரும் 3ம்தேதி முதல் தன்வந்திரி பெருமாளுக்கு திருமஞ்சன திருவிழா: முரளிதர சுவாமிகள் தகவல்

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வரும் 3ம்தேதி முதல் 108 கலச பூஜை, 108 சுமங்கலி பூஜையுடன் திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து பீடாதிபதி முரளிதர சுவாமிகள் கூறியதாவது: மஹா விஷ்ணு தசாவதாரங்களை தவிர்த்து தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் எடுத்துள்ளார். இதில் தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணு புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது தோன்றியவர்தான் தன்வந்திரிபகவான். சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை திருக்கரங்களில் ஏந்தி காட்சிகொடுத்தார்.

நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வை பெற்றனர். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். ஆரோக்கியமும் உண்டாகும். இவ்வளவு சிறப்பு பெற்ற  தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் 1995ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தன்வந்திரி பகவான் கையில் அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் அருள்பாலிக்கிறார்.  ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் என அழைக்கப்படும் இப்பீடத்தில்  சைவம், வைணவம்,  சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் என ஆறு மதங்களுக்குரிய தெய்வங்களை கொண்டு 89 பரிவார சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.  

அவற்றுடன் 468 சித்தர்கள் சிவலிங்கம் ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். தினமும் பல்வேறு வகையான யாகங்கள் நடைபெற்று யக்ஞ பூமியாக திகழ்ந்து வருகிறது. இங்கு அனைத்திற்கும் யாகம் ஒன்றே தீர்வு என்ற வகையில் 365 நாட்களும் பக்தர்கள் தங்கள் திருக்கரங்களாலே யாகங்கள் செய்து மன நிறைவுடன் செல்கின்றனர். சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பகவானுக்கு உகந்த ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினமான மார்ச் 3ம்தேதி முதல் அமாவாசை திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினமான ஜூன் 18ம்தேதி வரை  தினமும் மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலசங்கள் கொண்டு 108 நாட்கள் காலை 10.30 மணி முதல் 11.40 மணிவரை தொடர் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

மேலும்  மாலை 5 மணி முதல் 6 மணி வரை லட்ச குங்குமார்ச்சனையும், சுமங்கலி பூஜையும் நடைபெறவுள்ளது. நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாக கொண்டு உலக மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ஆயுள், ஆரோக்கியம் மேம்படவும், தீராத நோய்கள் தீரவும், கர்மவினை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், சகல ஐஸ்வர்யங்களும் பெறவும் இங்கு நடைபெற உள்ள திருமஞ்சன விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். திருமஞ்சன விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சுக்கு-வெல்லம், அபிஷேக தேன், அபிஷேக தைலம், அபிஷேக நெய், குங்குமம், யாக பஸ்பம்,  மந்திர ரக்ஷ்சை, மூலிகை ரக்ஷ்சை, ஜப தீர்த்தம், ஔஷத பிரசாதம், முக்குடி கஷாயம் மற்றும் தன்வந்திரி லேகியம் ஆகியவை வழங்கப்படும்.  

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், ராகு, கேது தோஷம் விலக பவுர்ணமி தோறும் சிறப்பு ஹோமமும், சகல விதமான திருஷ்டி, தோஷங்கள் அகலவும், சாபங்கள் நீங்கவும் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு சரப சூலினி பிரத்யங்கிரா யாகமும், தொழில், வியாபாரம் சிறக்கவும், பயங்கள் அகலவும் அஷ்டமியில் அஷ்ட கால மஹா பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் யாகமும்,  வாழ்க்கை வளம் பெறவும் பல்வேறு வகையான தடைகள் விலகவும், செல்வம் செழிக்கவும், பஞ்சமியில் பஞ்சமுக வராகி யாகமும் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று தன்வந்திரி பகவானின் அருளை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: