திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. காலை 5.20 மணிக்கு கொடிமரத்தில் கோமதிசங்கர் பட்டர் கொடியேற்றினார். பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்களும், 6.45 மணிக்கு சோடச மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார், கோயில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் கணேசன், திருவாவடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பலம் தம்பிரான், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார், பழக்கடை திருப்பதி, மாவட்ட திமுக துணை அமைப்பாளர்கள் பொன்முருகேசன், கேடிசி முருகன், தங்கப்பாண்டியன், லட்டுக்கடை கார்த்திகேயன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து திருவிழா மார்ச் 8ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. காலை, மாலையில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

5ம் திருநாளான மார்ச் 1ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 3ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகளைத் தொடர்ந்து 5 மணிக்கு மேல் கோயிலில் சுவாமி சண்முகர் உருகு சட்டசேவை, காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி சேருதல், அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சிவப்பு சாத்தியில் எழுந்தருளுகிறார். 8ம் திருவிழாவான 4ம் தேதி பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சைசாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

10ம் திருவிழாவான 6ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் முதலில் விநாயகர், அதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேர்கள் இழுக்கப்படுகின்றன. 7ம் தேதி இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி 12ம் திருவிழாவன்று மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்மன் மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தளுகின்றனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவர் குழு தலைவர் அருள்முருகன், கோயில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதாகுமரன், செந்தில்குமரன், ராமதாஸ், கணேசன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: