வேலூர்: வேலூர்- காட்பாடி சாலையில் மரச்சாமான் பட்டறையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இயந்திர தளவாடங்கள், மரச்சாமான்கள் தீயில் கருகி சேதமானது. வேலூர்- காட்பாடி சாலை சிஎம்சி மருத்துவமனை அவுட் கேட் எதிரில் கள்ளுக்கடை சந்து பகுதியில் மரக்கதவுகள், சன்னல்கள், கட்டில், பீரோ என வீட்டு உபயோக மரப்பொருட்களை செய்யும் மரம் விற்பனை கடைகளும், பட்டறைகளும் உள்ளன. வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த மாதவன் என்பவர் மரப்பட்டறையுடன், மரம் விற்பனை செய்யும் கடையையும் வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பட்டறையுடன் கூடிய கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை அங்கு கடைகளை திறக்க வந்த அப்பகுதி வியாபாரிகளும், தொழிலாளர்களும் அவரது கடையின் உள்பக்கத்தில் இருந்து நெருப்பும், புகையும் மூடப்பட்டிருந்த கதவின் இடைவெளியில் இருந்து தீக்கங்குகள் வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுபற்றி மாதவனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.உடனடியாக வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும், காட்பாடி தீயணைப்பு வீரர்களும் என 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முன்னதாக அப்பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீயணைப்பு பணியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டனர். இந்த தீ விபத்தால் அங்கிருந்த மரப்பட்டறை இயந்திரங்கள், மரச்சாமான்கள், தளவாடங்கள் என ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் தீயில் கருகி சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.