அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு நாளை திருக்கல்யாண விழா: சுசீந்திரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலின் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருக்கல்யாண விழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருக்கல்யான விழா நாளை காலை தொடங்குகிறது. நாளை முதல் 10 நாட்களுக்கு தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் வாகன பவனி நடைபெறும். வருகிற 4ம்தேதி அதிகாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனை பறக்கை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எடுத்துச்சென்று நீராட்டுதல் நடைபெறும்.

அங்கிருந்து ஆஸ்ரமம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு அம்மனை அழைத்து வந்து பூஜை நடத்தப்படும். மாலையில் புதுப்பெண் போல அம்மனுக்கு பட்டு உடுத்தி அலங்கரித்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக மீண்டும் தாணுமாலய சுவாமிக்கு அழைத்து வரப்படும். பின்பு ரதவீதியை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு செல்லப்படும். இரவு 9 மணிக்கு கோயிலில் மந்திரங்கள் ஓத, மேளதாளத்தோடு அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.

அதைதொடர்ந்து பக்தர்களுக்கு வெற்றிலை பாக்கு, திருநீறு, குங்குமம், மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் (5ம்தேதி) மாலை 5 மணிக்கு சப்பர தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனை அமர செய்து பக்தர்கள் வடமிழுத்து ரதவீதியை சுற்றி தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் ஆனந்த், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: