பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் புதர் மண்டி கிடக்கும் சரக்கு பொருட்கள் கொண்டு செல்லும் பாதை: சீரமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், மீட்டர்கேஜ் இருப்பு பாதை அப்புறப்படுத்தப்பட்டு, கடந்த 2008 முதல் அகல ரயில்பாதை பணி துவங்கப்பட்டது.  இப்பணி கடந்த 2015ம் ஆண்டு நிறைவடைந்தது பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. அப்போது, ரயிலில் ஏற்றி செல்லும் அதிக எடையுள்ள பொருட்களை கொண்டுசெல்ல, ரயில்வே ஸ்டேஷனின் ஒரு பகுதியில், சுமார் 8அடி அகலத்தில் சாய்வுதள பாதை அமைக்கப்பட்டது.

அதில், அகல ரயில் சேவை துவங்கப்பட்டதிலிருந்து சில ஆண்டுகள் இரும்பு தள்ளு வண்டி மூலம் நடைபாதைக்கு பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன. ஆனால், சில ஆண்டுகளிலேயே சரக்கு பொருட்கள் கொண்டுசெல்லும் அந்த சாய்வுதளத்தை சீர்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் புதர்கள் சூழ்ந்தது. சுமார் 8அடி அகலத்தில் இருந்த சாய்வுதளம் 4அடியில் புதர்கள் சூழ்ந்து மறைந்தவாறு உள்ளது. மேலும், அப்பகுதியை சுற்றிலும் பராமரிப்பு இல்லாமல், இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் நடமாடுவதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் அகல ரயில்பாதை பணி நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும், சாய்வு தளத்தை சீர்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நான்கு சக்கர தள்ளுவண்டி மூலம் பொருட்கள் கொண்டுசெல்ல  முடியாமல் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு பொருட்கள் கொண்டு செல்லும் நடைபாதையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துனர்.

Related Stories: