யோகா பட்டப்படிப்பு முடித்துவிட்டு 30 ஆண்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் அதிரடி கைது: எண்ணூரில் பரபரப்பு

திருவெற்றியூர்: எண்ணூரில் யோகா பட்டப்படிப்பு முடித்துவிட்டு 30 ஆண்டுகள் மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சுதர்சன்குமார் (55). தனது வீட்டின் அருகில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி இணை இயக்குனர் விசுவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை உதவி ஆணையர் சரவணகுமார், மருத்துவ ஆய்வாளர்கள் சாலமன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு எண்ணூர் நேதாஜிநகர் பகுதியில் உள்ள கிளினிக்கில் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு  சிகிச்சை அளித்து கொண்டிருந்த சுதர்சன்குமாரிடம் தகுதி சான்றிதழ்களை கேட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்ததும், யோகா பட்டப்படிப்பு முடித்துவிட்டு அந்த சான்றிதழை வைத்துக்கொண்டு  கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை எழுதி கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஓய்வுபெற்ற டாக்டர் ஒருவரின் பெயரை கிளினிக் விளம்பர போர்டில் எழுதி வைத்துகொண்டு கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து, கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் மற்றும் போலி மருந்து சீட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு சுதர்சன்குமாரை எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  எண்ணூரில் பிரபலமான கிளினிக் நடத்தி வந்தவர் போலி டாக்டர் என தெரிந்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: