தை செவ்வாய் உற்சவத்தையொட்டி வைத்தீஸ்வரன் கோயில் தேரோட்டம்

சீர்காழி: தை செவ்வாய் உற்சவத்தையொட்டி வைத்தீஸ்வரன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தையல் நாயகி அம்பாள் வைத்தியநாத சுவாமி உடனாகிய கோயில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய், தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இந்த கோயிலில் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் 4448 நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்வ முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இதைதொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: