கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு பிரையண்ட் பூங்காவில் கருகும் மலர் செடிகள்

*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பிரையண்ட் பூங்காவில் மலர் செடிகள் கருகி வருகின்றன.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயிலும் மாலை வேளையில் கடும் குளிரும் நிலவி வருகிறது. மேலும் அதிகாலை வேளையில் உறை பனியானது நிலவி வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக இருக்கும் பிரையண்ட் பூங்காவில் பனியின் தாக்கத்தின் காரணமாகவும் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் தற்போது கருகி வருகிறது. தொடர்ந்து தற்போது நடவு செய்யப்பட்ட நாற்றுக்கள் மட்டுமே உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளிடம் 30 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

கட்டணம் வசூல் செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காண்பதற்கு மலர்கள் இல்லாமல் உள்ளதால் பணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி முறையான பராமரிப்புன்றி இருப்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

எனவே மலர்கள் இன்றி இருக்கும் பனிக்காலத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் மட்டுமே பூக்கக்கூடிய மலர்களை இந்த குளிர் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கு ஏற்றவாறு நடவு செய்ய வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: