வேலைக்கு சென்ற இடத்தில் துபாயில் கொடுமை பெண்ணை மீட்டு தரக்கோரி கலெக்டர் கார் முன் தர்ணா

*குழந்தைகளுடன் கணவர் போராட்டம்

கிருஷ்ணகிரி : வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் கொடுமைக்குள்ளாகி வரும் மனைவியை மீட்டுத் தரக்கோரி அவரது கணவர் தனது குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.கிருஷ்ணகிரி கோட்டை பகதியைச் சேர்ந்தவர் பஷீர். இவர், தனது குழந்தைகளுடன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது, குழந்தைகளுடன் திடீரென கலெக்டர் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அவர்களிடம், வெளிநாட்டு வேலைக்கு சென்ற தனது மனைவியை கொடுமைப்படுத்தி வருகின்றனர். எனவே, அவரை மீட்டுத் தர வேண்டுமென பஷீர் வலியுறுத்தினார். இதையடுத்து, அவரை சமரசப்படுத்தி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மனு அளிக்க செய்தனர்.

அவர் அளிததுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது மனைவி நஜ்மா(29). கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஹக்கீம் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் பெண்கள் ஓட்டுனர் வேலை இருப்பதாக கூறினர். அதிக சம்பளம் பெற்றுத் தருவதாக மூளைச்சலவை செய்தனர். அதனை நம்பி கடந்த 21.12.2022ம் தேதி நஜ்மா துபாய்க்கு சென்றார்.

இதையடுத்து, எனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, கடந்த ஒரு மாத காலமாக, அங்கு அவரை கஷ்டப்படுத்துவதாகவும், அத்துமீறல்கள் இருப்பதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் என் மனைவியை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: