விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

விருதுநகர்: விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாக கட்டிடம் மாவட்டத்தில் முதன்முதலாக 1997ல் கட்டி 2002ல் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கு குற்றவியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியர் நீதிமன்ற எண் 2, மாவட்ட கூடுதல் நீதிமன்றம், சப்கோர்ட், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என 5 நீதிமன்றங்கள் உள்ளன. நில அபகரிப்பு தடுப்பு நீதிமன்றம் நீதிபதி நியமனம் செய்யப்படாதால் செயல்பாட்டில் இல்லை. நீதிமன்ற வளாகத்திற்கும், நீதிபதிகளின் குடியிருப்புகளுக்கும் சுற்றுச்சுவர் இல்லாத நிலை, இரவு காவலர் நியமனம் இல்லாததால் பாதுகாப்பு குறைபாடுகளும், விஷ ஜந்துகள் நடமாட்டமும் அதிகம் உள்ளது.

நீதிமன்றத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து வழக்குகளுக்கு 300க்கும் மேற்பட்ட மக்களும், 120 வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என தினசரி 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு வங்கி கிளைக்கும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நீதிமன்ற வளாகத்திலும், நீதிபதிகளின் குடியிருப்புகளுக்கும் குடிநீர் வசதி செய்யப் படவில்லை. நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் இல்லாததால் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தாலே துர்நாற்றம் வீசுகிறது. மூக்கை துணி, கையால் மூடிய நிலையில் வளாகத்தில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்ட கேண்டீன், கட்டிய நாள் முதல் கூடுதல் வாடகை நிர்ணயத்தால் திறக்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள படிக்கட்டுகள் இல்லாமல், லிப்ட் இல்லாத நிலை உள்ளது. சாத்தூர், அருப்புக்கோட்டை நீதிமன்ற கட்டிடங்களில் சாய்தள படி, லிப்ட் வசதி உள்ள நிலையில், விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சாய்தள படி, லிப்ட் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டிடத்திற்கு வரும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் முதல் அனைவருக்குமான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். கட்டிடத்தின் பயன்பாட்டு காலம் முடிந்திருந்தால் இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு சுற்றுச்சுவர், இரவு காவலர் நியமனம், குடிநீர் வசதி, தூய்மை பணியாளர் நியமனம் செய்ய வேண்டும்.

 கேண்டீனுக்கான வாடகை இரட்டை இலக்கத்தில் இருப்பதால் எடுத்து நடத்த யாரும் முன்வரவில்லை. பயன்பாட்டிற்கு வராமல் பழுதடைந்து கிடக்கும் கேண்டீனை சரி செய்து குறைந்த வாடகைக்கு விடுவதற்கு வழி செய்ய வேண்டும். வழக்கறிஞர்களுக்கு அறை ஏற்பாடு செய்ய வேண்டும். வளாகத்தில் பல இடங்களில் தரைத்தளம் குண்டும், குழி விழுந்திருப்பதை சரி செய்ய வேண்டும். வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் குற்றவியல் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நில அபகரிப்பு தடுப்பு நீதிமன்றம், சப்கோர்ட் ஆகியவற்றிற்கு காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடத்தை நியமனம் செய்ய வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றம் தலைநகரில் செயல்பட வேண்டுமென்ற நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென தெரிவிக்கின்றனர்.

Related Stories: