காங்கயம் பகுதியில் நடப்பாண்டு பலநூறு ஏக்கரில் பருத்தி சாகுபடி

காங்கயம் : காங்கயம் பகுதியில் நடப்பாண்டு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் பருத்தி சாகுபடிக்கு பெயர் பெற்ற பகுதியாக காங்கயம் பகுதி விளங்கி வந்தது. கடந்த 20ஆண்டுகள் முன்புவரை காங்கயம் மற்றும் அருகிலுள்ள சம்பந்தம்பாளையம், வட்டமலை, குள்ளம்பாளையம், புதுப்பாளையம், காரப்பாளையம், குறுக்கபாளையம், எல்லப்பாளையம்புதூர்  சூரியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்  பருத்தி

சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

இந்த பகுதியில் பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற கரிசல்மண் அதிகம் என்பதால் பருத்தி விளைச்சலும் அமோகமாக இருந்தது. காலப்போக்கில் தண்ணீர், கூலியாட்கள் பிரச்சினை, போதிய விலையின்மை, புழுத்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் பருத்தி சாகுபடியை விட்டுவிட்டு சின்னவெங்காயம், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு மாறினர்.

 இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் பருத்தியில் புழு தாக்காதபடி பி டி ரகத்தினை அறிமுகம் செய்தனர். தொடக்கத்தில் இதில் அதிக ஆர்வம் காட்டாத விவசாயிகள் கடந்த 5ஆண்டுகளாக காங்கயம் பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

இதுபற்றி பருத்தி விவசாயிகள் தரப்பில் பாரம்பரியமாக பருத்தி சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கூறியதாவது:  கடந்த 20வருடங்கள் முன்புவரை இந்தப் பகுதியில் பருத்தி சாகுபடி பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்று வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் பருத்தியிலிருந்து வேறு பயிர்களுக்கு மாறினோம். இருப்பினும் எங்களைப் போல ஆங்காங்கே ஒரு சில விவசாயிகள் தொடர்ந்து குறைவான அளவிலேயே பருத்தி சாகுபடி செய்து வந்தோம்.  தற்போது ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடி செய்ய உழவு, விதை, களை எடுத்தல், உரம், பூச்சி மருந்து, பறிப்பு கூலி என ரூ.30முதல் 35ஆயிரம் வரை செலவாகும். அதிகபட்சமாக ஏக்கருக்கு 10லிருந்து 15குவிண்டால் மகசூல் கிடைக்கும்.

குவிண்டால் ரூ. 5ஆயிரத்துக்கு விற்பனையானால் ஏக்கருக்கு ரூ.40ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். இதற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க வேண்டும். பருத்தி வெடிக்கும் காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டால் விளைச்சல் வெகுவாக சுருங்கிவிடும். அரசாங்கம் பருத்திக்கு விலை நிர்ணயம் செய்வதுடன் அந்தந்த பகுதியில் சேமிப்பு கிடங்கு வசதிகளை செய்து கொடுத்தால் பருத்தி சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும், என்றார்.

Related Stories: