பாத்திரத்தை மூடாமல் சமைப்பது ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல்

சென்னை : உணவுகளை சரியான முறையில் சமைப்பது ஒரு கலையாகும். உணவை சரியான முறையில் சமைப்பதால் அதனை சுவையாக மாற்றி செரிமானத்தை மேம்படுத்தலாம். மேலும் சில ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு அதிகமாக கிடைக்கவும் இது உதவுகிறது. இந்நிலையில் சமையல் பாத்திரத்தை மூடி வைக்காமல் சமைப்பது உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கிறது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொடர்ந்து மக்களிடம் ஆய்வு செய்து அறிக்கை களை வெளியிடுகிறது. இதற்காக, ஐசிஎம்ஆர், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் (NIN) இணைந்து இதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், சமைக்கும் போது பாத்திரத்தை மூடி வைத்து சமைப்பது சரியான முறை. இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துகளை தக்க வைக்கவும் உதவுகிறது.

பாத்திரத்தை திறந்து வைத்து சமைப்பது அதிக நேரம் எடுப்பதுடன், காற்றின் வெளிப்பாடு உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து இழப்பையும் அதிகரிக்கிறது. காய்கறிகள் மற்றும் கீரைகளை மூடி வைத்து சமைக்கும்போது அவைகளின் நிறம் மாறும். ஆனால் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படாது என குறிப்பிட்டுள்ளது. உணவு வகைகளில் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்த பிரஷர் குக்கரில் சமைப்பது சிறந்த வழியாகும் எனவும், அத்துடன் மைக்ரோவேவ் உணவு மிகக் குறைந்த அளவு தண்ணீரை எடுத்து, உணவை உள்ளே இருந்து ஆவியில் வேக வைக்கிறது.

இந்த முறை மற்ற சமையல் முறைகளை விட அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்கவைத்துக்கொள்ளும் என்றும், இதனால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் சரியாக சென்று சேரும். மேலும் உணவை வறுப்பதால் அதிக வெப்பநிலை காரணமாக, புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக அடிக்கடி உணவை வறுத்து சாப்பிடுவதால் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களின் நுகர்வு அதிகரிக்கிறது.

கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகும். அத்துடன் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை, இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான உடல் கொழுப்பு மற்றும் அசாதாரண கொலஸ்ட்ரால் உருவாகி அது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பாத்திரத்தை மூடாமல் சமைப்பது ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: