தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் பயணம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறையொட்டி, தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ததால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் வாகன போக்குவரத்து மிகுந்து பரபரப்புடன் காணப்படும். குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை விசேஷ நாட்களில் வாகன போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில், சனி, ஞாயிறு, மற்றும் இன்று பக்ரீத் பண்டிகை என தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் சனிக்கிழமையான நேற்று முன்தினம் இரவு ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். மேலும், நேற்றும், இன்றும் முகூர்த்த நாட்கள் என்பதாலும் போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக, தென் மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கார், பைக், ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.

இதன் காரணமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி சாலையில் 2 கிமீ தூரத்திற்கும் அதிகமாக வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்ற வாகனங்களால் சுங்கச்சாவடியை கடந்து செல்ல 40 நிமிடங்களுக்கு மேலானது. இதனால் வாகனங்களில் பயணித்த பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

The post தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் பயணம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: